வரலாறு:
மெய்கண்டார் தொண்டை மண்டலம் உள்ள திருமுனைப்பாடி நாடு என்னும் நாட்டிலே திருப்பெண்ணாகடம் என்ற ஊரில் சைவ வேளாளர் குலத்தாரான அச்சுத களப்பாளர் என்று ஒரு சிவனடியார் இருந்தார். அவரின் மனைவியின் பெயர் மங்களாம்பிகை அவர்தம் குடும்பத்திற்கு வழி வழியாய் திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்த சகலாகம பண்டிதர் என அழைக்கப்படும் சதாசிவ சிவாச்சாரியார் என்னும் அடியவர் ஆசாரிய பெருமகனாக விளங்கினார். களப்பாளருக்கு ஊழ்வினைப் பயனால் மக்கட் செல்வம் இல்லை. அவரும், அவர்தம் துணைவியாரும் அவர்களது ஆசாரிய சுவாமிகளிடம் சென்று முறையிட்டனர்.
சகலாகம பண்டிதரும், அவர் தம் குறைகளைப் போக்க, திருமுறை பாக்களில் கயிறு சாற்றிப் பார்த்தார், அப்போது, திருஞானசம்பந்தர் அருளிய திருவெண்காட்டு பதிகம் வந்தது.
"பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே"
சகலாகம பண்டிதர், தனது சீடரையும், அவர்தம் துணைவியாரையும் திருவெண்காடு சென்று அங்குள்ள, முக்குளத்தில் (சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் அக்னி தீர்த்தம்) நீராடி, திருவெண்காட்டு பதிகம் தனை அனுசந்தானம் செய்து, திரு வெண்காடரை, பணிந்து வருமாறு அருளினார். குருவின் திருவாக்குப் படியே களப்பாளரும் அவர் துணைவியாரும் திருவெண்காட்டிற்கு வந்து சுவேதவனப் பெருமானைப் பூசிக்கலானார்கள். ஒரு நாள் இரவு, களப்பாளரின் கனவில் இறையனார் தோன்றி.....அன்பரே...இப்பிறவியில் உமக்கு குழந்தை பாக்கியம் இல்லை, இருப்பினும், எனது அன்பனான சீர்காழிப் பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து வழிபட்டதால், திருஞான சம்பந்தனைப் போலவே உனக்கும் ஒரு தெய்வ மகவு தனை அருளுவோம் என்று திருவாய் மலர்ந்தார்.
கனவிலிருந்து விழித்துக் கொண்டவராய் எழுந்த களப்பாளருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அந்தக் கனவினை, தம் மனைவியிடம் தெரிவித்தார். மங்கைபாகர் அருளிய வண்ணமே அந்தத் திவ்யத் தம்பதிகளுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. திருவெண்காடரின் திருவருளால் அவதரித்த மகவாதலால், சுவேதவனப் பெருமாள் என்ற அவரது திருநாமத்தையே வைத்தனர்.
இளம் பிராயம்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஸ்வேதவனப் பெருமாள் வளரலானார். இளம் வயதிலேயே சிவ பக்தி மிகுந்தவராய்த் திகழ்ந்தார். ஒரு நாள், திருவெண்ணெய் நல்லூரில் (தம்பிரான் தொண்டரான சுந்தரமூர்த்தி சுவாமிகளை ஆட்கொண்ட திருத்தலம்) உள்ள தனது தாய்மாமாவின் இல்லத்திற்குச் சென்றிருந்தார் ஸ்வேதவனப் பெருமாள், அங்கே தனது நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருக்கையில், ஆகாய மார்க்கமாக பொதிகை மலை நோக்கி சென்று கொண்டிருந்த பரஞ்சோதி முனிவரின் கண்களில் தேஜோமயமான தெய்வக் குழந்தையான ஸ்வேதவனப் பெருமாள் தென்பட்டார். அவரைக் கண்டதும் கீழிறங்கி வந்து அவருக்கு மெய்ஞானம் தன்னை உபதேசித்தருளி அவருக்கு மெய்கண்டார் என்னும் திருநாமத்தையும் சூட்டி அருளினார். இப் பெயர் பரஞ்சோதி முனிவரின் ஞானாசிரியரான சத்திய ஞான தரிசிகள் என்னும் வடமொழிப் பெயரின் தமிழ் வடிவமாகும்.
நூற் பணி:
தனது குருவான பரஞ்சோதியார் உபதேசித்த சிவஞான சூத்திரங்களைத் தமிழில் அருளிச் செய்தார் மெய்கண்டார். அதற்கு அவரே வார்திகமும் அருளிச் செய்தார். அந்த நூல் சிவஞான போதம் என்று வழங்கலாயிற்று. (மெய்கண்ட சாத்திரங்களுள் முதலாவதாக விளங்கும் நூல்). அந்த நூலே பிற்காலத்தில் திரு அவதாரம் செய்தருளிய சந்தான ஆசாரியர்களின் சைவ சித்தாந்த நூல்களுக்கு ஆதாரமான நூலாக அமைந்தது.
அருணந்தி சிவாச்சாரியர் சீடராதல்:
இவ்வாறாக மெய்கண்டாரின் பேரு ம் புகழும் நாடெங்கும் பரவியது. இதனை கேள்விப்பட்ட, அவரது குல ஆசாரியரான சகலாகம பண்டிதர், மெய்கண்டாரைக் காண திரு வெண்ணை நல்லூருக்கு எழுந்தருளினார். அச்சமயம், ஊரில் உள்ள மக்கள் அனைவரும் மெய்கண்டாரின் அருளுரை தனை கேட்க குழுமியிருந்தனர். மெய்கண்டாரும், அவர்களுக்கு நல்லாசி வழங்கிக் கொண்டு, ஆணவ மலந்தனைப் பற்றி அருளுரை வழங்கிக் கொண்டிருந்தார்.
அருளுரை வழங்கிக் கொண்டிருந்த மெய்கண்டாரின் முன் சென்று...."இந்தச் சிறுவனுக்கு என்ன தெரியும்?" என்ற ஆணவத்தோடு....ஆணவம் ஆவது யாது? அதன் வடிவம் என்ன? என்று கேட்டார் சகலாகம பண்டிதர். பதிலேதும் பேசாமல், மெய்கண்டார் தனது விரல்களினால் சகலாகம பண்டிதரை ஆணவத்தின் வடிவமென சுட்டிக் காட்டினார்.
மெய்கண்டதேவரின் அருள் நோக்கால், தன்னிலை உணர்தவாராய், மெய்கண்டாரின் திருவடிகளில் தண்டனிட்டு எழுந்த சகலாகம பண்டிதர்......மெய்கண்டாரிடம், தன்னை அவர்தம் சீடராக ஏற்று அருளும்படி வேண்டினார். மெய்கண்டாரும், அவரை ஆட்கொண்டருளத் திருவுளம் கொண்டு.... சகலாகம பண்டிதருக்கு சிவ தீக்ஷை தந்தருளி, அவருக்கு அருணந்தி சிவம் என்ற திருநாமந் தனையும் வழங்கினார். சைவர்களால் சந்தானக் குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார் அருணந்தி சிவாச்சாரியார். இவர் மெய்கண்டாரின் சிவஞான போதம் என்னும் நூலை அனுசரித்து சிவஞான சித்தியார் எனும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றி அருளினார். இந் நூலின் சிறப்புக்கு, சிவத்தின் மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். சிவஞான சித்தியார் தவிர, மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் இன்னொரு நூலான இருபா இருபது என்னும் நூலும் இவர் அருளியதே. சந்தான குரவர்களில் மூன்றாமவரான மறைஞான சம்பந்தர் இவர் மாணாக்கர் ஆவார்.
முக்தி:
மெய்கண்டதேவர் ஐப்பசி மாத சுவாதி நட்சத்திரத்தில் முத்தியடைந்தார். இவரின் குருபூசைத் தினத்தைச் சைவர்கள் சிறப்பாகக் கொண்டாடுவர்.
மெய்கண்டார் திருக்கோவில் :
திருவெண்ணெநல்லூரில் மெய்கண்டாருக்கு திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவானதேசிக பரமாசாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
லொகேஷன்:https://goo.gl/maps/6RBmLv5YKQcYHg8q6
குருபூஜை:
ஐப்பசி 29ஆம் நாள்:14.11.2020 சனிக்கிழமை குருபூஜை நடைபெற உள்ளது.

No comments:
Post a Comment