Saturday, 29 May 2021

ஸ்ரீ தேவி மாயம்மா வரலாறு

ஸ்ரீ தேவி மாயம்மா,சட்டக் கல்லூரி,சாந்திநகர், சின்னகொல்லபட்டி, சேலம்.

 

 


 வரலாறு:
                          1920ல் இருந்து மாயம்மா இந்தியாவின் தென் பகுதியான குமரி முனையில்  எழில் கொஞ்சும் கடல்களின் அருகில் தன் வசிப்பிடமாகக் கொண்டார்.  அவரை ஒரு சாதாரண மனுஷியாக கூட கவனிக்கப்படாத நிலையில் இருந்தார்.  வாயைத் திறந்து ஒரு வார்த்தை கூட  பேசியதில்லை ஏதாவது ஒரு வித்தியாசமான குரல் எழுப்பி தன்னுடைய கருத்தை தெரிவிப்பார்.  திடீரென்று கடலில் நடப்பார் , திடீரென்று  கடலில் மூழ்கி கடற்பாசி போன்றவைகளை எடுத்துக் கொண்டு கரை சேர்ப்பார். திடீரென்று தோன்றி மாயமாக கடலில் சென்று வருவதால் கன்னியாகுமரி மக்கள் அந்த அம்மையாரை ' மாயம்மா' என்று அழைத்தனர்.

                          அருகில் இருக்க கூடிய வாழை மட்டையை வைத்து அந்த கடற்பாசியை , மேலே சூரியனை கையால் காண்பித்து நெருப்பை பற்ற வைப்பார்.  எப்படி ஓர் அபரிதமான சக்தி இருந்தால், ஈரமான கடல்பாசியை வாழ மட்டையுடன்  சூரியனிலிருந்து நெருப்பு மூட்டி பற்ற வைத்திருப்பார் . இதைபார்த்தால் ஒரு யாகம் வளர்ப்பது போல் காட்சியளிக்கும் . அப்போது அவர் வாய் ஏதோ முணுமுணுக்கும்.
 பல சமயம் கப்பல்களில் சென்ற மீனவர்கள் கடல் நடுவே சிக்கி ஆபத்துக்கு உள்ளாகிறார்கள்.   கடலில்  நீந்தி அவர்களை மீட்டு கரை சேர்ப்பார் . இதை அறியும்போது,  சம்சாரம் எனும் கடலில் நீந்தி கரை காண முடியாத நம்மை கரை சேர்க்கவே  மாயம்மா எனும் சித்த புருஷனி தோன்றியதாக  மனதிற்குபட்டது.

                           ஒரு நாள் , கன்னியாகுமரி சாலையில் உலாவிக் கொண்டிருந்த நாய் மீது சுற்றுலா பேருந்து  மோதி விட்டது. நாயின் குடல் வெளியே வந்து, அதை பார்த்து பரிதாபப்பட்ட மக்களுக்கு நடுவே மாயம்மா சென்று அந்த நாயின் குடலை உள்ளே வைத்து அருகில் இருந்த குச்சியை எடுத்து தையல் போட்டு , அங்கே இருக்கும் மணலை அள்ளி அதன் தோலின் மீது பூசிவிட்டார். சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த நாய் எழுந்து துள்ளிக் குதித்து ஓடியது . இதை கண்ணுற்ற மக்கள் மாயம்மாவின்  சக்தியை புரிந்து அவரை ஒரு சித்தராக பார்க்கத் தொடங்கினர்.

                          அவரால் காப்பாற்றப்பட்ட நாய் அவருடனே தங்க தொடங்கியது. அதன் முதல் கொண்டு பல நாய்களும் அவரை சுற்றி சுற்றி வரத் தொடங்கியது . அவரை 'பைரவ சித்தர்' ஆகவே பலர் பார்க்க தொடங்கினர். யாரேனும் மாயம்மாவிற்கு உணவு கொடுத்தால், அதை   நாய்களுக்கு பகிர்ந்து விட்டு பின்பு தான் உண்பார், அருகில் இருப்போருக்கும் ஊட்டி விடுவார். அவர் எந்தக் கடைகளில் உணவு வாங்கி உண்டாலும் அந்த கடையில் வியாபாரம் அந்த நாள் முதற்கொண்டு விருத்தியாகும்.  

                          மாயம்மா காலத்தில் வாழ்ந்த பல சாதுக்களும், யோகிகளும் மாயம்மாவின் தவ சக்தியையும் , அற்புதங்களையும் அறிந்துள்ளனர். அவர்களில் பூண்டி சுவாமியும் , திருக்கோவிலூர்  ஞானானந்தகிரி ஸ்வாமிகள், யோகிராம்சுரத்குமார்  போன்றோர் தன்னுடைய சீடர்களை மாயம்மாவின் தரிசனத்திற்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.   கன்னியாகுமரியின் நடமாடும் தெய்வமாகவே மாயம்மாவை இவர்கள் பார்த்திருக்கின்றனர்.

                           ஞானானந்த கிரி ஸ்வாமிகளின் சிஷ்யை பராசக்தியின் தரிசனம் பெற விரும்பினார். எனவே அவரை கன்யாகுமரியிலுள்ள ஆலையங்களுக்கு சென்று தரிசனம் செய்ய பனித்தார். அவருக்கு பிராப்தம் இருந்தால், பராசக்தியின் தரிசனம் கிடைக்கும் என்று கூறினார். அப்பக்தையும் கன்யாகுமரி சென்று கோயில் தரிசனம் செய்து விட்டு பராசக்தியின் தரிசனம் கிடைக்காத மனநிலையில் ஊர் திரும்பினார்.

                           தன்னுடைய குருவிடம் இதைப் பற்றி கூறினார். அதற்கு ஞானானந்த கிரி ஸ்வாமிகள் "பெண்ணே நீ பராசக்தியின் தரிசனத்தை பெற்று, அவளே உனக்கு உணவை ஊட்டிவிட்டார், ஆனால் அதை நீ தட்டிவிட்டாய். பராசக்தியை உன்னால் உணர முடியவில்லை" என்று கூறினார்.

                           அப்பொழுது தான் அந்தப்பெண்ணிற்கு நினைவு வந்தது. கோவிலுக்கு சென்று விட்டு கடற்கரையில் நின்றிருந்த மாயம்மா அருகில் இருப்போருக்கும் நாய்க்கும் உணவை ஊட்டிவிட்டார்.  அப்போது அங்கிருந்த அந்த பெண்மணிக்கும் ஊட்ட, அதை அவர் தட்டிவிட்டார். அதை நினைவு படுத்தி வருந்தினார். அதற்கு ஸ்வாமிகள் மாயம்மாவே பராசக்தியின் வடிவம் என்று கூறினார்.
 திரு ராஜேந்திரன் என்பவர் வடலூர் வள்ளலாரின் அதி தீவிர பக்தராக இருந்தவர். ஒருமுறை மாயம்மாவை கடற்கரையில் கண்டு அவரின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து. அவரை சித்த புருஷனியாகவே  ஏற்றுக்கொண்டு அவருக்கு பணிவிடை செய்துள்ளார்.   அவருடனே எங்கும் செல்ல தொடங்கினார்.

                          திரு ராஜேந்திரன் அவர்கள் மாயம்மாவை காரில் ஏற்றி ஒவ்வொரு ஊராக சென்றுள்ளார்.  சேலம் வந்தவர் அங்கேயே தங்கி விட்டார். சேலம் ஏற்காடு அடிவாரத்தில் குடில் அமைத்து அங்கே தன்னுடைய இருப்பிடமாக  இருக்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் சேர்வராயன் மக்கள் அவரை ஏற்காமல் அந்த வருடத்திற்கான மழை பொழியாததற்கு  மாயம்மா அங்கு வந்ததே காரணம் என்று கூறினர்.  ஆனால் அதைப் புன்னகையுடன் எதிர்கொண்டு  அன்று இரவு மழை பெய்யப் போவதாக குறிப்பால் உணர்த்தினார்.  அதுபோலவே அன்று இரவு விடிய விடிய  ஒரு வருடத்திற்கான மழை பெய்து அனைவரையும் மனம் குளிரச் செய்தது.  அங்கிருக்கிற மக்களும் அவரின் மகத்துவத்தை புரிந்து கொண்டனர்.

                          9-2-1992 நாளன்று தான் தன்னுடைய சமாதி நாளாக செய்ய முடிவு செய்து , அன்று மாலை 16:20 அளவில் இந்த ஸ்தூல உடம்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.  ஏராளமான மக்கள் தங்களுடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்காக  ஜீவசமாதியை  நாடுகிறார்கள் . கேட்டவருக்கு கேட்ட வரம் வழங்கும் வள்ளலாக பூரண உயிர்ப்புடன்,  சேலம் சட்டக் கல்லூரி அருகில் மாயம்மா அவர்கள் சமாதி கொண்டிருக்கிறார்.

முகவரி:
ஸ்ரீ தேவி மாயம்மா கோவில்,
சட்டக் கல்லூரி,சாந்திநகர்,
சின்னகொல்லபட்டி,சேலம்.

லொகேஷன்:https://goo.gl/maps/UUbqE5p6eXAj3uTR9

------------------------------------------------------------------
WhatsApp No.9894560575

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

No comments:

Post a Comment