Sunday, 23 May 2021

ஹர்பஜன்சிங் பாபா வரலாறு

ஹர்பஜன்சிங் பாபா,நாதூ லா கணவாய்,கிழக்கு சிக்கிம் மாவட்டம்,சிக்கிம்
 

 


வரலாறு:
                         நாதூ லா கணவாய் என்பது இமயமலையில் உள்ள ஒரு கணவாய். இது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையும் சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியையும் இணைக்கிறது. இது கடல் மட்டத்தில் இருந்து 4,310 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இது பண்டைய பட்டுப்பாதையின் ஒரு பகுதி. திபெத்திய மொழியில் நாதூ என்றால் கேட்கும் காதுகள் என்றும் லா என்றால் கணவாய் என்றும் பொருள். இக்கணவாய் சிக்கிமின் தலைநகரான கேங்டாக்கில் இருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தியர்கள் மட்டுமே இக்கணவாய்க்குச் செல்ல முடியும். அவர்களும் செல்வதற்கு முன்பு அனுமதிச்சீட்டு பெற்றே செல்ல வேண்டும்.

                       நாதூ லா கணவாய் இந்தியாவிற்கும் சீனாவுக்கு இடையில் உள்ள மூன்று வணிகப்பாதைகளுள் ஒன்று.

                        ஜேலேப்லா பாஸ் மற்றும் நாதுலா பாஸ் ஆகிய இரு மலைப்பாதைகளுக்கிடையே இந்த பாபா ஹர்பஜன் சிங் நினைவான  கோவில் உள்ளது
                        
                         ஹர்பஜன் சிங் பஞ்சாப்பில் 1941-ஆம் ஆண்டு பிறந்தார். இராணுவத்தில் பஞ்சாப் ரெஜிமென்டில் 23-வது பட்டாலியனில் சேர்ந்தார். 1968-ஆம் ஆண்டு சிக்கிம்மில் உள்ள நாதுலா எல்லைக்கு மாற்றப்பட்டார். இந்தக் காலக்கட்டத்தில் நாதுலாவில் அடிக்கடி எல்லைச் சண்டைகள் நடைபெற்றுவந்த நேரம். இரு நாட்டு வீரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வந்த நேரம். 1968-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 04-ஆம் தேதி கோவேறு கழுதைகள் தொகுதி ஒன்றுடன் பட்டாலியன் தலைமையகத்திலிருந்து சென்றபோது மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். அவரது உடலை தேடினார்கள். உடல் கிடைக்கவில்லை. அவர் படையிலிருந்து ஓடிவிட்டார் என்ற செய்தியும் பரவியது.

                          அந்நிலையில், வீரர் ஒருவரின் கனவில் தோன்றிய ஹர்பஜன் சிங், தன்னுடைய ஆயுதங்கள் இந்த இடத்தில் இருக்கின்றது, தன்னுடைய உடல் இந்த இடத்தில் கிடக்கின்றது என்றும் சொல்லியிருக்கின்றார். இதனை கனவு கண்ட வீரர் அலட்சியப்படுத்தியுள்ளார். ஹர்பஜன் சிங் காணாமல் போய் நான்கு நாட்கள் கழித்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. (அப்போதய வழக்கப்படி, இறந்த வீரர்களின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்படும். அவருடைய சீருடை மட்டுமே குடும்பத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.) கனவில் தெரிவித்த அதே இடத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதால், பட்டாலியன் வீரர்களுக்கு ஹர்பஜன் சிங் மீது மரியாதை வரத்தொடங்கியுள்ளது. அவ்வப்போது ஹர்பஜன் சிங், வீரர்களின் கனவில் வந்து, 'நான் உங்களைக் காப்பாற்றுகிறேன், உங்களுக்காக எல்லையில் காவல் காக்கின்றேன், சீனா - இந்தியா மீது படையெடுத்தாலோ பிரச்சனை எழுப்ப முயன்றாலோ அதனை மூன்று நாட்களுக்கு முன்பே எச்சரிக்கின்றேன்' என்று கூறிவந்துள்ளார்.

                         இரவில் வெள்ளை உடை அணிந்த ஒருவர் குதிரையில் ரோந்துப்பணியில் சுற்றுவதாக சீனர்கள் பலமுறைத் தெரிவித்துள்ளனர். இதனால் ஹர்பஜன் சிங் மீது பயம் கலந்த பக்தி இருநாட்டு வீரர்களுக்கும் ஏற்பட்டது. இந்திய வீரர்கள் நாதுலாவில் அவருக்கென ஆலயம் கட்டி வழிபட்டனர். (சீன வீரர்களும் அங்கு ஹர்பஜன் சிங்கை வழிபடுகின்றனர்.) வழிபாட்டுத் தலத்தில் மூன்று அறைகள் வரிசையாக உள்ளன. அதில் மத்திய அறையில் அவர் படம் மாட்டப்பட்டுள்ளது. அவரது சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் கோவில் போன்றே தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வலது புற அறையானது அவரது அலுவலமாகும். அங்கு மேசை, நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. அவர் அங்கு அமர்ந்து தனது அலுவலக வேலைகளை பார்ப்பதாக கூறுகிறார்கள். இடது புற அறையில் அவர் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு தினமும் அவருடைய பூட்ஸ்-க்கு பாலீஷ் செய்து வைக்கப்படுகின்றது. படுக்கை விரிப்பும் நன்கு விரித்து வைக்கப்படுகின்றது. மறுநாள் காலையில், அவருடைய பூட்ஸ் மண்ணாகி இருக்கும். விரித்துவைத்தப் படுக்கை கலைந்து இருக்கும்

                           ஹர்பஜன் சிங் கட்டுப்பாடு நிறைந்தவர். இரவு காவலில் இருக்கும் ஏதேனும் வீரர் கண்ணயர்ந்து தூங்கி விட்டால், அவர் கன்னத்தில் ஹர்பஜன் சிங் அறைவதுண்டு. ஹர்பஜன் சிங் தங்கள் மத்தியில் இன்னும் உயிரோடு இருப்பதாக வீரர்கள் நினைத்ததால், அவர் இறந்ததைப் பதிவு செய்யவில்லை. அவருக்கு இராணுவம் தொடர்ந்து சம்பளத்தை வழங்கியது. அவர் திருமணம் செய்யாததால் அவரது தாயாருக்கு அவரது சம்பளத்தை அனுப்பி வைத்தது இந்திய இராணுவம். (ஹர்பஜன் சிங் உடல் மீட்கப்படவில்லை, எனவே அவர் இறந்ததாக பதிவு செய்ய முடியாது. அவர் இறந்ததாக அறிவிக்க முடியாத நிலையில் அவருக்கான சம்பளத்தை இராணுவம் வழங்கியதாகவும் ஒரு கருத்து நிலவுகின்றது.).

                          ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ஆம் தேதி அவர் பெயரில் அமிர்தசரஸ் செல்லும் இரயிலில் பஞ்சாப் மாநிலம் கபுர்தாலாவில் உள்ள அவர் கிராமத்திற்கு அவருக்கு என டிக்கெட் பதிவு செய்யப்படும். அவருடைய இருக்கைக்குக் கீழ் அவருடைய பெட்டி வைக்கப்படும். இரயில் படுக்கையில் அவர் படுக்கை விரிக்கப்படும். அவருக்குத் துணையாக மூன்று வீரர்களும் உடன் சென்று அவருடைய குடும்பத்தாரிடம் இந்தப்பெட்டியை ஒப்படைப்பார்கள். பின்னர் இரண்டு மாதங்கள் கழித்து அவர்கள் அந்தப்பெட்டியை வாங்கிக்கொண்டு நாதுலா திரும்புவார்கள். இந்த வழக்கம் மிகச்சமீபம் வரை நடந்தது. இராணுவத்தின் இந்த நடவடிக்கை பலதரப்பில் இருந்து விமர்சனத்திற்கு ஆளானது. பஞ்சாப்பை சேர்ந்த முன்னாள் படைவீரர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததையடுத்து, இந்திய இராணுவம் சத்தமில்லாமல் ஹர்பஜன் சிங்கிற்கு ஓய்வு கொடுத்துவிட்டது. இதற்குள்ளாக இவருக்கு கெளரவ கேப்டன் பதவியும், பின்னர் கெளரவ மேஜர் பொறுப்பும் வழங்கப்பட்டது. மேலும் இவருக்கு மகாவீர் சக்ரா விருதும் வழங்கப்பட்டது. நாதுலாவில் இருக்கும் போர் நினைவிடத்தில், முதலாவதாக இவரது பெயரையே பொறிக்கப்பட்டுள்ளது.

                        இராணுவம் இவரை பணியிலிருந்து விடுவித்தாலும், ஹர்பஜன் சிங் என்பவர் 'பாபா ஹர்பஜன் சிங்' என்று வீரர்களால் போற்றப்படுவதால், எல்லைப்புற சாலைகள் அமைப்பான 'கிரெப்' (GREF) ஹர்பஜன் சிங்கிற்கு மறுவேலை வழங்கியுள்ளது. இப்போது கிரெப் ஊழியராக அவர் வருடத்திற்கு இரண்டு மாத விடுப்பில் சொந்த ஊருக்கு சென்று வருகின்றார். நாதுலாவில் உள்ள அவர் கோவிலில் வரும் வருமானத்தில் ஒரு பகுதி அவருடைய குடும்பத்திற்கு அனுப்பப்படுகின்றது. பாபா ஹர்பஜன் சிங் பெட்டிப் படுக்கைகள் ஊருக்கு வரும்போது அவருடைய கிராமத்தில் விழா எடுக்கின்றார்கள். இந்தியா-சீனா எல்லைப்பகுதி வீரர்கள் சந்திப்பின் போது ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு இருக்கையை சீனர்கள் ஒதுக்குவதாகவும் சொல்கிறார்கள். ஹர்பஜன் சிங் சொல்லை மீறி செயல்பட எந்த படைவீரரும் தயாராக இல்லை. நாதுலா மட்டுமல்ல, வடக்கு சிக்கிம்மில் உள்ள இராணுவத்தினரும் தங்கள் கூடாரத்திற்கு வெளியே ஒரு சிறு விளக்கை ஏற்றி, அதனை பாபா ஹர்பஜன் சிங் என்று கருதி வழிபட்டு வருகின்றனர். பாபா ஹர்பஜன் சிங் எல்லையில் காவல் புரியும் வீரர்களுக்கு காவல் தெய்வமாகவே இருக்கின்றார்.

லொகேஷன்:https://goo.gl/maps/WnrinUb9wGKBg4yc9
-----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

No comments:

Post a Comment