Thursday, 13 May 2021

ஸ்ரீ காமாட்சி மௌன குரு சுவாமி வரலாறு

ஸ்ரீ காமாட்சி மௌன குரு சுவாமி,திருமலைக்கேணி,திண்டுக்கல் மாவட்டம்


 

 


 

வரலாறு : 

                         திண்டுக்கல் மாவட்டம், செங்குறிச்சி கிராமம், வல்லம்பட்டி என்ற ஊரில் குப்புசாமி, குப்பாயி அம்மாள் தம்பதியருக்கு முதல் குழந்தையாக அவதரித்த காமாட்சி சுவாமிகள், சிறு வயதில் ஆன்மிகத்தில் மிகவும் நாட்டம் கொண்டிருந்தார்.  அவரது பெற்றோர் உரிய காலத்தில் அவருக்குத் திருமணமும் செய்துவைத்தனர். இல்லறத்தில் நாட்டமில்லாத சுவாமிகள் 1905-ம் ஆண்டு, கார்த்திகை மாதம் 12-ம் தேதி, துறவறத்தை நாடித் தம் இல்லத்திலிருந்து வெளியேறினார்.

                            அருகிலிருந்த கரந்தமலை அய்யனார் கோயிலில் எவரும் அறியாமல் சுமார் ஆறு மாதங்கள் தங்கித் தவமியற்றினார். அங்கு அவருக்கு ஞானம் கிடைத்தது. அங்கிருந்து திருமலைக்கேணிக்கு வந்து நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.  அவர் இங்கே வந்து தங்கியதற்கும் ஒரு காரணம் உண்டு. இங்கு மிகப் பழமையான சுப்ரமணியர் ஆலயம் ஒன்று இருக்கிறது. அங்குள்ள மூலவர், பாண்டிய மன்னர் ஒருவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

                         இந்த ஆலயத்தைப் பற்றி வெளியுலகுக்கு அதிகமாகத் தெரியாததால், சித்தரை இங்கு வந்து தங்கியிருந்து மூலவருக்கு மீண்டும் சக்தியைப் பெருக்கிப் பிரபலமடையச் செய்ய வேண்டுமென்று முருகப் பெருமான் ஆணையிட்டதாகக் கூறப்படுகிறது.  (1981-ம் ஆண்டு திருமுருகக் கிருபானந்த வாரியாரின் ஆலோசனையின்படி, இந்தக் கருவறையின் மீது மற்றொரு தளம் எழுப்பப்பட்டு, அங்கும் ஒரு மூலவர் ஸ்தாபிதம் செய்யப்பட்டிருக்கிறார்.)

                           காமாட்சி சுவாமிகள் சுப்பரமணியர் ஆலயத்திற்கு வடபுறம், ஒரு அத்தி மரத்தின் அடியில் தங்கித் தவமியற்றிக்கொண்டிருந்தார். ஒரு ஆணும், இரு பெண்களும், தினைமாவு சாப்பிட்டதால்,தொண்டை காய்ந்துவிட்டது, கொஞ்சம் தீர்த்தம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.  காமாட்சி சுவாமிகளுக்கு வந்திருக்கும் நபர்கள் யாரென்று தெரிந்துவிட்டது. இருப்பினும் அவர்களுடைய நோக்கம் என்னவென்று தெரிந்து கொள்வதற்காகக் கோயிலின் தென்புறம் உள்ள சுனைக்குச் சென்று நீர் அருந்தக் கூறினார்.

                          ஆனால் அவர்களோ, சுவாமிகளே நீர் தர வேண்டும் என்று வற்புறுத்தினர்.  காமாட்சி சுவாமிகள் தான் தவமியற்றிய இடத்தின் அருகில் ஒரு சிறு பள்ளம் தோண்ட, அதிலிருந்து நீர் கொப்பளித்து வந்தது. அவர்கள் அதனை அருந்திய பின், தங்கள் உண்மை சொரூபத்தைக் காட்டினர். முருகப் பெருமான்,வள்ளி தெய்வானையாகக் காட்சியளித்துச் சித்தரை வாழ்த்திவிட்டு மறைந்தனர்.  சித்தர் தியானம் செய்த இடத்தில் ஒரு மண்டபம் அமைக்கப்பட்டுச் சித்தரின் சொரூபமும் வைக்கப்பட்டிருக்கிறது.

                           முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சியளித்த இடத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டிருக்கிறது.  காமாட்சி சுவாமிகளின் விருப்பப்படி, சுப்ரமணியர் ஆலயத்திற்கு அருகில் மடம் ஒன்று அமைக்கப்பட்டது. அங்கு துறவிகள் பலருக்கு அடைக்கலம் கொடுக்கப்பட்டது.  அன்னதானப் பிரியரான காமாட்சி சுவாமிகள், ஒரே நேரத்தில் இரு பக்தர்களின் இல்லங்களுக்குச் சென்று உணவருந்தியது, தமது பக்தர்களின் விருப்பப்படி தூல உடல்கள் மடத்திலிருக்க, ஆன்ம உடல்களுடன் காசி யாத்திரைக்கு அழைத்துச் சென்றது போன்ற சித்துக்களையும் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

                         இந்தப் பூவுலகில் தமக்கு அளிக்கப்பட்டிருந்த காலம் முடிந்துவிட்டதை அறிந்த காமாட்சி சுவாமிகள், மடத்தினுள் தமக்கென்று ஒரு சமாதிக் குழியைத் தோண்டச் செய்தார். பிங்கள வருடம் (1917) ஆடி மாதம்,17-ம் தேதி,செவ்வாய்க்கிழமை இரவு 11.00 மணிக்குப் பூராட நட்சத்திரத்தில் சமாதிக் குழிக்குள் சென்று அமர்ந்தார்.

                          சமாதிக் குழி மூடப்பட்டு, மேலே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதற்குப் பின்புறம் அவரது திருஉருவச் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  சுவாமிகளின் ஜீவசமாதியைத் தரிசிக்க திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து செந்துறை செல்லும் பேருந்தில் திருமலைக்கேணியை அடையலாம். பேருந்து நிறுத்தத்திலிருந்து மலைச் சரிவில் கீழ் நோக்கி இறங்கினால் சற்று தூரத்தில் சுப்ரமணியர் ஆலயத்தையும், சுவாமிகளின் ஜீவசமாதியையும் தரிசிக்கலாம்.

முகவரி:
ஸ்ரீ காமாட்சி மௌன குரு சுவாமி,
திண்டுக்கல் டு செந்துறை
திருமலைக்கேணி,
திண்டுக்கல் மாவட்டம்


லொகேஷன்:https://goo.gl/maps/4mencyrGwFTU7bvg7
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575
 

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626
 

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

No comments:

Post a Comment