Saturday, 15 May 2021

ஸ்ரீ அண்ணன் சுவாமி வரலாறு

ஸ்ரீ அண்ணன் சுவாமி,புதூர்,திருவாரூர் மாவட்டம்

 

வரலாறு:
                        ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் 1937-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள்(போகி பண்டிகை) திருநெல்லிக்காவல் அருகில் உள்ள புதூர் கிராமத்தில் திரு சக்கரபாணி திருமதி கமலாம்பாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.தம்பதியர் அக்குழந்தைக்கு அருணாச்சலம் என்று பெயரிட்டனர். அருணச்சலம் புதூரிலேயே மிகவும் வசதி படைத்த ஓர் குடும்பத்தில் அவதரித்தார்.இந்த புதூர் கிராமமானது திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் நால்ரோடு என்ற இடத்தில் இருந்து மேற்கே சுமார் 3 கிமீதொலைவில் உள்ளது.

                         ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் தனது ஆரம்ப பள்ளிக்கல்வியை புதூரில் உள்ள தொடக்க பள்ளியிலேயே பெற்றார்.பின்பு 10-ம் வகுப்புக்கு சமமான பள்ளிக் -கல்வியை அரசு உயர்நிலைப்பள்ளி திருத்துறைப்பூண்டியில் பெற்றார் (Board High School -Thiruthuraipoondi).

                         அண்ணன் சுவாமிகள் சிறு குழந்தையாக இருந்த காலத்திலேயே அவர் வீட்டிற்கு வந்தஇறையடியார் ஒருவர் குழந்தையை ஆசீர்வதித்துஅக்குழந்தையின் நாவில் எழுதிச்சென்றுள்ளார்.ஆனால் தனது 15-வது வயதில் அண்ணனுக்கு கிடைத்த தீட்சை அவரது தினசரி வாழ்வில் ஒரு பெறும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

                          தினமும் புகை வண்டியில் சென்று திருத்துறைப்பூண்டியில் இறங்கி அங்கிருந்து ஒரு நடைபாதை வழியாக பள்ளி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் ஸ்ரீ அண்ணன் அவர்கள்.அவ்வாறு ஒரு நாள் வழக்கம்போல் நடைபாதையில் செல்லும்போது “அருணாச்சலம் நில்!” என்ற குரல் கேட்டு நின்றார் நம் 15 வயது நிரம்பிய அண்ணன்.ஓர் யோகி தோற்றத்தில் ஒரு பெரியவர் அப்பாதையின் ஓரத்தில் உள்ள முள்ளி ஆற்றங்கரை மயானத்தில் இருந்து வருவதை கண்டார் நம் அண்ணன் அவர்கள்.”எங்கே செல்கின்றாய்?..” என்றார் அந்த யோகி,”பள்ளிக்கு செல்கிறேன்..” என்றார் அண்ணன்,”உலகுக்கே போதிக்க போகும் உனக்கு ஏட்டுக்கல்வி எதற்கு!..” என்றார் அந்த யோகி.வியந்தார் நம் அண்ணன்.ஒரு பென்சில் கொடு என்று கேட்டு வாங்கி அண்ணனின் நாக்கில் ஏதோ சிலவற்றை எழுதினார் அந்த யோகி.”எனக்கு பசிக்கின்றது ஏதாவது சாப்பிட தருகிறாயா..” என்றார் யோகி.உடனே நம் அண்ணன் கொஞ்ச தூரத்தில் இருந்த ஒரு உணவகத்தை நோக்கி விரைந்தார்(அன்றைய மங்களாம்பிகா ஹோட்டல்)அங்கிருந்து சிற்றுண்டியை கட்டிக்கொண்டு வந்து பார்க்கையில் யோகியை அங்கு காணவில்லை,பிறகு ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு எங்கும் தேடியும் அந்த யோகி தென்படவில்லை.பராசக்தி வந்த வேலையை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் போலும்!..

                           அண்ணனின் தினசரி நடவடிக்கைகள் இந்த சம்பவத்திற்கு பிறகு வெகுவாக மாறத்தொடங்கியது,தினமும் அருகில் உள்ள பிடாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு அம்மனை விளக்கேற்றி வழிபட்டார்கள்.வெளிப்புற ஆடம்பரமின்றி நுண்ணிய வழிபாடாகத்தான் அதனை அண்ணன் செய்தார்கள்.இயல்பாகவே அண்ணனுக்கு அம்பாள் வழிபாட்டில் நாட்டம் இருந்தது.

                           ஒரு செல்வந்தர் வீட்டில் பிறந்திருந்தாலும் அண்ணன் என்றுமே பணத்திலோ புகழிலோ பற்று வைத்ததில்லை.அண்ணன் அவர்களின் தந்தையார் ஒரு அரிசி ஆலை வைத்து நடத்திவந்தார்கள், சில காலம் அண்ணன் அந்த ஆலையின் நிர்வாகத்தை கவனித்தார்கள்.அப்போது நடந்த ஒரு கணக்கெடுப்பில் (Audit)சில குறைபாடுகளை கண்டு ஆலையின் சில கணக்கு புத்தகங்களை எடுத்து கொண்டு அலுவலர்கள் ஆணவத்தோடு எங்கள் அலுவலகத்துக்கு வந்து வாங்கிச்செல் என அண்ணனிடம் கூறி தங்களின் ஜீப்பில் புறப்பட்டார்கள், புதூரின் ஆற்றுப்பாலம் கூட கடக்காத நிலையில் அந்த ஜீப் நின்றுவிட்டது.பழுதின் காரணம் புரியாமல் திகைத்தனர் அலுவலர்கள்,அண்ணனின் பேரன்பையும் பேரருளையும் உணர்ந்திருந்த சில கிராம மக்கள் அந்த அலுவலர்களிடம் “பெரிய தம்பியிடம் (அண்ணனை வயது முதிர்ந்த கிராம மக்கள் அழைத்தது) புத்தகங்களை திருப்பி கொடுத்துவிட்டு வாருங்கள் ஜீப் சரியாகிவிடும்” என கூற அலுவலர்களும் அவ்வாறு செய்தனர் பின்பு ஜீப் எவ்வித சிரமமும் இன்றி ஸ்டார்ட் ஆனது.பராசக்தி தன் குழந்தையை அரவணைத்து என்றோ ஆட்கொண்டு விட்டாள் என்பது போல் இந்த அதிசய நிகழ்வு அமைந்தது.

                           ஒரு மளிகை கடையும் வைத்து அண்ணன் அவர்கள் அந்த கடை வியாபரத்தையும் கவனித்தார்கள். இங்கு இருக்கையில் இயல்பாகவே கர்ம யோகமும் பக்தி யோகமும் அண்ணனுக்கு அமைந்தது.தன் தயா உணர்வினால் கேட்டவர்கெல்லாம் கடை சாமான்களை எந்த எதிர்பார்ப்புமின்றி வழங்கினார்கள்.இடையில் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் இறை நாமத்தை ஜபம் செய்தும் இறை சிந்தனையில் ஆழ்ந்தும் இருந்தார்கள்.“கும்பிட்டுகிட்டே இருக்கணும்...” என்று பிற்காலத்தில் தான் இவ்விதமாக சாதகம் செய்ததை அண்ணன் தன் பக்தர்களுக்கு கூறினார்கள்.மேலும் அண்ணன் அவர்கள் ராமகிருஷ்ண பரமஹம்சர்,விவேகானந்தர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை தன் சீடர்களுக்கு கூறினார்கள்.

                           அண்ணனின் 17-வது வயதிலிருந்தே பல ஞானிகள் யோகிகள் தாமாக வந்து அண்ணனை சந்திக்க துவங்கினர்.ஆண்டாள்புரம் சுவாமிகள்,மருதூர் சுவாமிகள்,கோரம்பொட்டி சுவாமிகள்,திருச்செந்தூர் சுவாமிகள்,அதிராம்பட்டினம் சுவாமிகள்(இஸ்லாமிய) போன்றோர் அண்ணனை சந்திக்க அடிக்கடி புதூர் வந்தனர். வயதில் இளைய அண்ணனை அவரைவிட பல வயது மூத்த சித்தர்கள்,யோகிகள் பலர் பார்க்க வந்தது ஒரு வியப்பான விஷயமாகும்.

                           மருதூர் சுவாமிகள் அவர்கள் பல உபாசனைகளை அண்ணனுக்கு வழங்கினார்கள்(கணபதி உபாசனை முதலிய).அண்ணன் அவர்கள் பிற்காலத்தில் தனது சீடர்களுக்கு இந்த பல உபாசனைகளை அவரவர் பக்குவத்திற்கு ஏற்றார்போல் உபதேசம் செய்து வழங்கி அவற்றில் எப்போதும் திளைத்திருக்குமாறு கூறினார்கள். இரசவாதம்(Alchemy),இயந்திர தத்துவம்(Science of yantra) போன்ற பல நுண்ணிய அறிவியல் அற்புதங்களை மருதூர் ஐயா அண்ணனுக்கு வழங்கி இருந்தும் அண்ணன் அவற்றில் எல்லாம் மூழ்கி ஆன்ம தேடலை மறந்து விட கூடாது என்பதில் தெளிவாக இருந்ததால் தன் சீடர்களுக்கு இவ்விஷயத்தில் ஆர்வம் காட்ட சொல்லவில்லை.

                அண்ணன் பின்பு அரிசி ஆலையில் ஒரு 10×8 அறையில் தங்க தொடங்கினார்கள்.வெளியில் செல்லும் வழக்கமும் குறைந்தது.ஆலைக்கு பின்புறமுள்ள ஒரு அத்தி மரத்தில் பராசக்தியானவள் மஹா காளி ரூபத்தில் எழுந்து அருளிருக்கின்றாள் என அண்ணனுக்கு அம்பாள் உணர்த்தி இருந்தாள்.எனவே அங்கு ஒரு சிறிய கோயில் எழுப்ப அண்ணன் விழைந்தார்கள்.அந்த அத்தி மரத்தை “அத்திமரத்து ஆச்சி” என அண்ணன் பக்தியுடன் அழைத்தார்கள்.

                தினமும் அண்ணன் அவர்கள் தனது அறையில் உள்ள தெய்வங்களுக்கு ஊதுபத்தி போன்றவற்றை ஏற்றி வழிபடும்போது அத்திமரத்து ஆச்சியையும் வழிபடுவது வழக்கமாயிற்று.பொதுவாக மாலை நேரங்களில் அண்ணன் வசிக்கும் அறை மற்றும் அத்திமரத்து ஆச்சி இருப்பிடம்,அரிசி ஆலையின் களம் இவற்றில் அருள் மனமும் ஆன்மீக ஆரவாரமும் எழும்ப துவங்கும். அண்ணனின் பக்தர்கள் மற்றும் சீடர்கள் மாலையில் ஒன்று கூடி அண்ணன் வசித்த அறைக்கு அருகில் இருக்கும் குளமே புண்ணிய தீர்த்தமாகவும் அண்ணன் மற்றும் அத்தி மரத்து ஆச்சி அம்பாளின் வெளிப்பாடாகவும் தங்களின் அனுபவத்தில் அறிந்து இந்த தினசரி மாலை கொண்டாட்டத்தில் திளைத்தனர்.இது பக்தர்கள் அனைவருக்கும் இனிய சத்சங்கமாகஅமைந்தது. ஜாதி,மதம், அறிவு,ஆற்றல் இவற்றை கடந்து ஆன்ம ஒறுமைப்பாட்டை ஒவ்வொரு பக்தருக்கும் உணர்த்தும் விதமாக நடக்கும் இந்த கொண்டாட்டம் இரவு சுமார் 3 மணி வரையும் தொடர்வதுண்டு.அரிசி மாவும் கல்யாணமுருங்கை இலையும் கலந்த கலவையில் செய்த அடையை அனைவரும் உண்டு களித்தனர்.அடையின் இலக்கணம் ஏதும் அதில் இல்லாவிட்டாலும் கூட அண்ணனின் அருளால் அந்த அடை அனைவருக்கும் சுவையானதாக அமைந்தது.தத்துவ,காதல் சினிமா பாடல்கள் அனைவரும் பாட ஹார்மோனியம்,கடம், கஞ்சிரா,மோர்சிங்போன்ற வாத்திய கருவிகள் பாடல்களுக்கு அணி சேர்க்க பக்தர்கள் அனைவரும் காதலர்கள் தங்களுள் இருக்கும் ஈர்ப்பை போன்ற ஒரு அம்பாளுடனான ஆத்மார்த்த தொடர்பை உணர்ந்து அனுபவித்தனர். ஏனென்றால் அம்பாளின் அம்சம் அதிகமாக அண்ணனிடம் வெளிப்பட்டது. அண்ணனை அனைவரும் அம்பாளாகவே வழிபட்டனர்.

                “வழக்கமாகவே தன்னை காண வரும் பக்தர்களுக்கு உணவளித்து அவர்களது பசியை போக்கி உள்ளத்தேடல்களை பூர்த்தி செய்து வந்தார்கள் அண்ணன் அவர்கள்.எத்தனை பேர் வருவார்கள் என் முன்கூட்டியே தன் ஞான திருஷ்டியால் உணர்ந்து அத்தனை இட்லி பொட்டலங்களை வாங்கி வரச்சொல்லி, வரும் அன்பர்களுக்கு அன்போடு உணவளித்து மகிழ்ந்தார்கள்.வெள்ளிக்கிழமை பூஜை மற்றும் நவராத்திரி பூஜை போன்ற எந்த விழாவாக இருந்தாலும் சரி யாருக்காகவும் விழாவை தாமதிக்காமல் சரியான நேரத்தில் விழாவை நடத்தி உணவு பரிமாறப்பட வேண்டும் என்பதில் தன் சீடர்களிடம் அண்ணன் கண்டிப்பாக இருந்தார்கள்” என கூறுகின்றார் அண்ணனின் சேவகனாய் தன்னை அண்ணனின் திருவடியில் சமர்பித்து வாழும் திரு.சிவப்பிரகாசம் அவர்கள் (விளமல் ஐயா). அண்ணன் இவ்வாறாக அக்கறை காட்டியதில் இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அனைவரும் இறைவன் முன் சமம் என்ற உணர்வு.மற்றொன்று குழந்தைகள் பசியால் தூங்கிவிட்டால் இந்த பூஜை புனஸ்காரங்களின் பலன்தான் என்ன என்ற தெளிவு.

                    இதேபோன்று இவ்விஷயத்தில் விளமல் ஐயா அவர்கள் கவனம் செலுத்துவது வியப்பானது.தனது விளமல் ஸ்ரீ அண்ணன் சுவாமிகள் ஆலயத்தில் (விளமல் சரணாலயம்) பிரமாண்டமான பல விழாக்களால் அண்ணனை கொண்டாடி அனைவருக்கும் அண்ணனின் அருள் கிடைக்க அயராது உழைக்கும் இவர்,ஒவ்வொரு வெள்ளிக்கிழமை பூஜையானலும் சரி,பிறந்தநாள்,குருபூஜை, நவராத்திரி விழாவானாலும் சரி யாருக்காகவும் அண்ணனை காக்க வைப்பதில்லை, அம்பாளாகிய அண்ணனுக்கு சரியான நேரத்தில் அபிஷேக ஆராதனைகளை பக்தியுடன் செய்து அன்பர்களை கண்டுகளிக்க வைத்து சரியான நேரத்தில் சுவையான உணவையும் பரிமாறி,வரும் பக்தர்களின் பிரச்சினைகளை அண்ணனிடம் கூறி அண்ணனின் வழிகாட்டலுக்காக சரணாகதி அடையச்சொல்லுகிறார்கள்.

                   புதூர் ஜீவ சமாதி பீடத்திலும் அண்ணனின் ஓர் சீடர், பக்தர்களுக்கு ஏழை எளிய மக்களுக்கு மூன்று வேளையும் உணவளித்து மகிழ்கிறார்.காதடைத்து வயிற்றுப்பசியோடு ஒருவர் இருக்கையில் இறைவன், ஆன்மா போன்றவை யார் காதில் ஏறும்?.,அண்ணனின் காலடியில் இருந்து இவர்கள் போன்ற சீடர்கள் கற்றுத்தெளிந்த பண்பாடுகளை இன்றும் இவர்கள் மக்களிடம் காட்டி வருவதில் அண்ணனுக்கு பெருமை சேர்க்கின்றனர்.

                          அண்ணன் அவர்கள் ஜீவசமாதி அடைவதற்கு சில வருடங்கள் முன்பாகவே இவ்வுலக விவகாரங்களை விரைவில் முடித்துக்கொள்ளப் போவதாக தன் சீடர்களிடம் கூறி இருந்தார்கள்.ஆனால் சீடர்கள் அதை இயல்பாக எடுத்துக்–கொண்டார்கள். ஏனெனில் அண்ணன் கடும் தவம் இயற்றும் காலங்களில் அறையின் கதவை சாத்திக்கொண்டு உணவு ஏதும் இன்றி பல நாட்கள் வெவ்வேறு சமாதி நிலையில் திளைத்து இருந்தார்கள். சமயத்தில் இதய துடிப்பும் நாடித்துடிப்பு இன்றியும் அவரது உடல் இருக்கும். இதை பார்த்து குழப்பமடைந்த சீடர்கள் பலர் கவலையொடு இருக்க, அண்ணன் சில நாட்களில் திரும்பவும் தன் யதார்த்த நிலைக்கு திரும்பி வருவது அங்கு வழக்கமாக நடக்கும் ஒன்று.ஆனால் இம்முறை அண்ணன் ஒரு அக்னி குண்டத்தை ஏற்படுத்தச்செய்து அதன் அருகில் அக்னியின் உஷ்ணம் படும்படியாக அமர்ந்தும் நின்றும் இருந்தார்கள்.

                         சிலம்பாட்டம் போன்ற தற்காப்புகலைகளில் தேர்ச்சிபெற்ற அண்ணனின் கடின தேகம் தீயினால் சிறிது சிறிதாக கரைந்தது.பக்தர்கள் அனைவரும் தங்களை தாயாக காத்து நின்ற அண்ணனின் இந்த தவம் குறித்து கவலைப்பட்டனர்.ஆண்டாள்புரம் சுவாமிகளிடம் சென்று அண்ணனின் இந்த அக்னி தவத்தை பற்றி அன்புடன் முறையிட்டனர்.சுவாமிகளோ அண்ணனின் இந்த தவத்தின் சூட்சுமத்தை அறிந்து,வந்த பக்தர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்கள்.

                         இவ்விதமாக1988-ல் நவராத்திரிக்கு பிறகு தொடங்கிய இந்த தவம் அண்ணனின் ஜீவசமாதி வரை தொடர்ந்தது.1989-ல் வந்த போகிப்பண்டிகையில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க அண்ணன் அவர்கள் கலந்துகொண்டார்கள்.பேரண்ட பெருவெளியில் திளைத்த தம் அறிவுடன் அண்ணன் அவர்கள் சுமார் நான்கு மணியளவிலேயே அறைக்கு வெளியே வந்து ஓர் சுவற்றின் மீது கைகளை ஊன்றி நின்று கொண்டே இருந்தார்கள். அண்ணனின் உணர்வு வியாபக உணர்வாக இருந்ததால் அங்கு நடக்கும் விழா ஆர்பாட்டத்தில் அண்ணனின் கவனம் செல்லவில்லை,இவ்வாறாக இரவு 10 மணி வரை அண்ணன், இறை உணர்வுடன் நின்று கொண்டே இருந்தார்கள்.பின்பு அண்ணனின் கவனத்தை ஈர்க்கும் வகையில், எல்லோரும் பசியோடு காத்துக் -கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒரு 10 நிமிடம் அறையில் வந்து உட்காருங்கள் போதும் வணங்கி முடித்துவிடுவார்கள் என்றும் அண்ணனின் முக்கிய சீடர்கள் ஒருவர் கூற அதை கேட்டவுடன் மெதுவாக தனது வழக்கமான இடத்தில் வந்து அண்ணன் அமர்ந்தார்கள், அண்ணனுக்கு மாலை அணிவித்து சாம்பிராணி போட்டு அனைவரும் வணங்கினர்,அதற்குபின் அண்ணன் கதவை சாத்திக்கொண்டார்கள்.இவ்வாறாக நாட்கள் நகர்ந்தன.

                       1989-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் நாள் புதன் கிழமை வழக்கம் போல் பொழுது புலர்ந்தது,அண்ணன் வழக்கம் போல் அக்னியின் முன் நின்று கொண்டிருந்தார்கள்.பால்வண்ணன் மற்றும் ஜெயபால் ஆகியோர் ஏதோ டிராக்டர் வாங்கும் விஷயமாக திருவாரூர் சென்றிருந்தார்கள்.டாக்டர் திரு.நந்தகுமார் அவர்களின் மைத்துனர் நாகேந்திரன் அனுப்பிய மணியாடரை அண்ணன் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார்கள்.அனந்தபத்மனாபன் அவர்கள் அவ்வளாகத்தில் இருந்தார்கள். திரு.சுவாமினாதன் அவர்கள் அண்ணணின் தேவைகளை கவனித்துவிட்டு சுவாமிகளின் குடிசைக்கு சென்றார்கள்.ரைஸ்மில் வழக்கம் -போல் ஓடிக்கொண்டிருந்தது.

                          திடீரென்று அண்ணன் சீதாராமனை பார்த்து 12:30மணி பஸ் உள்ளே சென்று விட்டதா என கேட்டு பின்பு தெருவில் செல்லும் ஐஸ் வண்டி காரரிடமிருந்து ஒரு ஐஸ் வாங்கிவர சொன்னார்கள்,சீதாராமனும் ஐஸை வாங்கிவந்து அண்ணனிடம் கொடுத்து சற்றே தூரத்திற்கு சென்றார்.ஆனால் ஏதோ ஒன்று சீதாராமனுக்கு உணர்த்த உடனடியாக அண்ணனிடம் திரும்பி வந்தார் சீதாராமன்.அண்ணன் தனது நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள்,கண்கள் மேலே வான் நோக்கி நிலைத்து இருந்தன,எவ்வித அசைவும் இல்லை,மின்னல் அடித்ததை போன்ற உணர்வுடன் “ஐயா..” என அலறினார் சீதாராமன்,அனைவரும் பதறி ஓடிவந்தனர்.
            
                         டாக்டர். இப்ராஹிம் வந்து அண்ணனை பரிசோதித்தார், இருதயம் நின்றுவிட்டதை உறுதி செய்தார்.சீதாராமன் கையை வைத்து பார்க்கையில் இருதயம் ஓடியது.டாக்டர். இப்ராஹிமிடம் மறுமுறை சோதிக்க வேண்டினர்.டாக்டர்.இப்ராஹிம் சோதித்து இருதயம் நின்றுவிட்டதை கூறினார். ஆனால் சீதாராமன் கையை வைத்து பார்க்கையில் இருதயம் ஓடியது!

                         இத்தனை காலம் தாயாய் இருந்து அனைவரையும் அரவணைத்து காத்த அண்ணன் ஜீவசமாதி அடைந்திருந்தார்கள்.சீடர்களும் பக்தர்களும் தங்களின் தெய்வத்தாய் தங்களை விட்டு பிரிந்த துக்கத்தில் அழுது புரண்டனர்.உலகம் வெறுமையாய் தோன்றிற்று.என்ன இனி செய்வது என சிந்திக்ககூட பலமின்றி தன் சுய உணர்வை இழந்துகிடந்தனர்.ஒருவாறு சுய நினைவுக்கு திரும்பிய பிறகு அண்ணனின் ஜீவசமாதி அடைந்த நிலையை ஒருவாறு உணர்ந்தனர். முதல் நாள் மதியம் ஜீவசமாதி அடைந்த நேரத்திலிருந்து,மறுநாள் மாலை ஜீவசமாதி பீடத்தில் அண்ணனுடைய ஸ்தூல தேகம் வைக்கப்படும் வரை தேகம் வியர்த்துக்கொண்டே இருந்ததாகவும்,அதை துணியால் துடைத்துக்கொண்டே இருந்ததாகவும் அண்ணனின் சகோதரர் உட்பட பல சீடர்கள் கூறினார்கள்.ரைஸ் மில்லின் எதிரே இருந்த அண்ணன் குடும்பத்தார்க்கு சொந்தமான மூங்கில் கொல்லையில்,அண்ணனின் ஸ்தூல தேகம் வைக்கப்பட்டு சித்த புருஷருக்கு செய்யவேண்டிய கிரியைகள் செய்யப்பட்டு, ஜீவசமாதி பீடம் எழுப்பப்பட்டது.

                          பிற்காலத்தில் அது ஆலயமாக விரிவாக்கப்பட்டது. எளிமையும்,அமைதியும் நிரம்பிய அண்ணனின் ஜீவசமாதி பீடம் தரிசிப்பவர்களுக்கெல்லாம் கேட்பதை கொடுக்கும் கற்பக விருட்சமாய் இன்றும் விளங்கி வருவது ஒரு நிதர்சனமான உண்மை.

நன்றி:http://www.sriannanswamigal.com

முகவரி:
ஸ்ரீ அண்ணன் சுவாமி,
புதூர்,திருவாரூர் மாவட்டம்


லொகேஷன்:https://goo.gl/maps/89nuTGT9bjBegt3F6
-----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg

No comments:

Post a Comment