Wednesday, 6 January 2021

மதுரை அஷ்டமி சப்பரம் நாள்:06.01.2021

மதுரை அஷ்டமி சப்பரம் நாள்:06.01.2021 புதன்கிழமை அதிகாலை       

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கடோரபாபி என்பவனுக்கு முக்தியளித்த லீலை

(சகலஜீவ ராசிகளுக்கும் படியளந்த லீலையாக சொல்வதும் உண்டு)  





























 வரலாறு:                                         
                          மார்கழி மாதத்தில், உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தைக்குறிக்கும் நிகழ்ச்சியாகக் கருதப்படும் மதுரையில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்  சார்பாக நடைபெறும் முக்கிய விழாக்களில் இதுவும்  ஒன்று 'அஷ்டமி சப்பரம்' என்னும் தேர் திருவிழா  வெகு சிறப்பாக நடைபெறும். மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும் அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் உலா வருவது வழக்கம்.
இந்நிகழ்ச்சி, அதிகாலை 5.30 மணிக்கு  கோயிலிலிருந்து சுவாமி,அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு வெளி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில் அடியார்கள்  கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா வந்து, அம்மன் சப்பரத்தை பெண்கள்  இழுப்பது தனிச்சிறப்பாகும். நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்த சப்பரத்தை  ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வர். மேலும், கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த பக்தர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்வர். திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், அள்ள அள்ள அண்ணம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்பது நம்பிக்கை. இந்த நிகழ்வுகான முக்கியமான வரலாற்றை பார்ப்போம்

                          ஒரு நாள் சிவபெருமானும், உமாதேவியாரும் ஏகாந்தமாயிருக்கும் சமயம் தேவி தாய்க்கேயுரிய கவலையுடன், ‘ஏன் சுவாமி! இவ்வுலகில் தோன்றிய உயிர்கள் இறக்கும் வரை துன்பத்திற்கும், பாவத்திற்கும் ஆளாகும் நிலை மாற வழியில்லையா? பிறப்பு, இறப்பின்றி முக்தி அடையவும், பாவங்கள் நீங்கவும் ஒரு வழி சொல்லுங்கள்’ என்றாள்.

                           அச்சமயம் உயிர்களுக்கெல்லாம் தந்தையான சிவபிரான் திருவாலவாய் எனப்படும் மதுரையின் சிறப்பை எடுத்துக் கூறியதோடு அஷ்டமி பிரதட்சிணம் பற்றியும் தேவிக்கு விரிவாக விளக்கினார். மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்கு இகபர துன்பம் நீங்கி முக்தி கிடப்பது உறுதி என்றும் கூறினார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் திருமங்கலம் என்னும் ஒரு கிராமம் உள்ளது. அங்கு ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்த பிராமணன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் வேத, வேதாந்த நூல்களைக் கற்று கரை கண்டவன். மிக்க அறிவாளி. கடவுள் பக்தி மிக்கவன். பிராமண நியதிகளிலிருந்து வழுவாது வாழ்ந்தவன். எனினும் அவன் மிகக் கொடியவன். பல தீய வழிகளில் பணம் சேர்ப்பவன். அவனைக் கண்டு மக்கள் அஞ்சி ஒதுங்கினர்.

                           அதே ஊரில் மற்றொரு பிராமணன் இருந்தான். அவன் கத்தரித் தோட்டம் வைத்து, அதில் விளையும் கத்தரிக் காய்களை விற்று வாழ்ந்து வந்தான். ஒரு நாள் கோயிலுக்கு சிவதரிசனம் செய்ய வந்த கத்தரிக்காய் பிராமணனை, பாவி பிராமணன் கண்டு அவனை வாயில் வந்த படியெல்லாம் பேசி, உதைத்து சுவாமி தரிசனம் செய்ய விடாது விரட்டி விட்டான். இதனால் மனம் நொந்த கத்தரிக்காய் பிராமணன் உடனே பாண்டிய ராஜனிடம் போய் முறையிட்டான். பாண்டிய மன்னன் உடன் அவனை அழைத்து கோபத்துடன் அவன் அப்படிச் செய்த காரணம் கேட்டான். உடன் பாபி, ‘அரசே, கத்தரிக்காய் மாமிசத்திற்கு ஒப்பானது. அதை உண்பது பாவம். ஆதலால், நான் அவனை ஆலயத்திற்கு வரவிடாது உதைத்து விரட்டினேன்’ என்றான். அதனைக் கேட்ட அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அரசனோ இதற்கு எப்படித் தீர்வு கூறுவதென குழம்பி நின்றான். அச்சமயம் அகத்திய மாமுனிவர் அரசவைக்கு வந்தார்.

                           அவரை வணங்கி நின்ற பாண்டிய மன்னன், “ஹே! குருதேவா! கத்தரிக்காய் பற்றிய வரலாற்றைக் கூறியருளுக” என வேண்டினான். அகத்தியரும், ‘முன்னொரு காலத்தில் வார்த்தாகன் என்னும் பெயருடைய ஒருவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து கொண்டிருந்தான். அச்சமயம் வைகுண்டத்திலிருந்து கருடாரூடராக விஷ்ணு வந்தார். வார்த்தாகனோ விஷ்ணுவை கவனிக்காது சிவபூஜையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தான். விஷ்ணு கோபித்து வார்த்தாகனை கற்ப முடிவு வரையில் ஒரு செடியாக மாறும்படியும், அச்செடியில் உண்டாகும் காயும் சாப்பிட ஏற்றதாகாது என்றும் சாபமிட்டு மறைந்தார்.
வார்த்தாகனோ தனக்கு ஏற்பட்ட சாபத்திற்கு பயந்து மேலும் சிவ பூஜை, அர்ச்சனை செய்தான். சிவபெருமான் தரிசனமளித்து, “உன் பூஜையால் மகிழ்ந்தோம். ஸ்ரீ விஷ்ணுவின் சாபத்திற்கு அஞ்ச வேண்டாம். உனது நாமசம்பந்தமான வார்த்தாகச் செடியில் விளையும் காயானது பிராமணர் சாப்பிட ஏற்றது, உனது கறியின்றி எனக்குச் செய்யும் பூஜை ஏற்புடையதாகாது. என் அன்பர்களுக்கு நீ விருப்பமுடையவனாவாய்.” என வரமளித்தார்.
                          
                            எனவே வார்த்தாகக் காயெனப்படும் கத்தரிக்காய் சாப்பிடுவது தவறல்ல” என்றுரைத்து அகத்தியர் காசிக்குப் புறப்பட்டார். (வார்த்தாகன் விஷ்ணுவை அவமதித்த காரணத்தாலேயே அவருக்குகந்த ஏகாதசி, துவாதசி நாட்களில் கத்தரிக்காய் சாப்பிடுவது பாவம் எனக் கூறப்படுகிறது)
       
                           உடன் பாண்டிய ராஜன் பாவியாகிய பிராமணனைச் சிறையிலடைத்ததோடு, கத்தரிக்காய் பிராமணனுக்கு தன, தான்யங்கள் கொடுத்து உபசரித்து அனுப்பி வைத்தான். சிறையிலடைபட்ட பாவி அந்தணன் பசியால் வாடி சில நாளில் மரணமடைந்தான்.
 
                           மதுரையம்பதியில் மரணமடைந்ததால், அருகில் சிந்தாமணி எனும் கிராமத்தில் ஒரு இடையனுக்கு மகனாகப் பிறந்தான். முன்வினை காரணமாய் அவன் எப்பொழுதும் கொடிய செயல்களைச் செய்து கொண்டிருந்தான்.

                           அவன் முற்பிறவியில் சிறந்த சிவபக்தனாயிருந்த காரணம் பற்றி அவனுக்கு முக்தி கொடுக்க திருவுளம் கொண்டார் நம்ம சுந்தரேசப் பெருமான். மீனாட்சி தேவியை நோக்கி, ‘ஹே தேவி! பாவியாகிய அவ்விடையன் பல நற்காரியங்கள் செய்தவனாகையால் அவனுக்கு முக்தி கொடுக்க வேண்டும். நீ பசுவடிவம் எடுத்து அவன் தோட்டத்தில் பயிரை மேய்வது போலச் சென்றால், அவன் உன்னை அடிக்க துரத்தி வருவான். நீ இவ்வாலயத்தின் எல்லா வீதிகளையும் சுற்றி, நமது சன்னிதியருகில் வந்து அவனை இடபத்தின் பின் தள்ளிவிட்டு, பசுவுரு நீக்கி என்னருகில் வருவாய்’ என்று திருவாய் மலர்ந்தார்.

                           அன்னையும் சிவபிரான் ஆக்ஞைப்படி எல்லாம் செய்து முடித்தார். கீழே விழுந்தவுடன் இடையன் ஸ்தூல சரீரத்தை விட்டு சூக்கும சரீரத்துடன் தேவலோகம் சென்றான். அங்கு அவனுக்கு பார்வதி உடனுறை பரமேசுவரனாகக் காட்சி அளித்த எம்பெருமான்,
“உன்னால் செய்யப்பட்ட பாவங்கள் எல்லாம் என் கருணாசித்தத்தால் முற்றும் நீங்கி நீ சுத்தனாகி விட்டாய். இனி நீ கயிலையில் வசிப்பாய். உனக்கு முக்தி கொடுத்த இந்த அஷ்டமி திருநாளில் மதுரை பொற்றாமரைக் குளத்தில் நீராடி, நித்ய நியமங்களை நிறைவேற்றி, மனதில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேசரை தியானித்து, ஸ்ரீபஞ்சாட்சர ஜபத்தை வாயினால் ஓதிக் கொண்டு, மதுரையில் ஏழு வீதிகளை (வெளி வீதி, மாசிவீதி, ஆவணிவீதி,சித்திரை வீதி,ஆடி வீதி,சுவாமி சன்னதி 2 வீதி)
அனைத்து வீதிகளையும், பிரகாரங்களையும் வலம் வந்து, ஆலயத்திலுள்ள எழுந்தருளியுள்ள  மூர்த்திகளையும் தரிசித்து, சந்நதியில் நமஸ்கரித்து,   தங்கள் வீடு சென்று, தங்கள் வசதிக்கேற்ப நெய், தேன், தயிர் இவற்றோடு சிவபக்தர்களாகிய அந்தணருக்கு போஜனம் செய்வித்து, அவர்களது ஆசிகளைப் பெற்றால் அவர்களுக்கு முக்தியும், கைலாய வாசமும் கிட்டுவது உறுதி” என்றார்
எனவே, மார்கழி மாத சுக்லபட்ச அஷ்டமி திதியில் எவ்வூரில் இருப்பினும் அங்குள்ள சிவாலயத்தில் பிரதட்சிணம் செய்ய வேண்டும். இவ்வாறு பிரட்சிணம் செய்வதால் ஓர் அடிக்கு ஓர் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். வலம் வரும்போது எறும்புப் புற்றுகளுக்கு அரிசியிட வேண்டும். அவ்வாறு செய்தால் இலட்சம் பிராமணர்களுக்கு போஜனம் செய்த பலனை அடைவர். எவ்வளவு பாபம் செய்தவராயினும் அஷ்டமி பிரட்சிணத்தால் முக்தி அடைவர். மதுரையில் வாழ்வோர் கோயிலைச் சுற்றியுள்ள தைவீதி முதலாக ஏழு வீதிகளை வலம் வருதல் அவசியம். முடியாதவர் ஆடி வீதியையே ஏழுமுறை வலம் வர, ஏழு வீதியும் வலம் செய்த பயனை அடைவர். யராவது ஒரு சைவ சந்யாசிக்காவது அன்னதானம் செய்வது நல்லது. மேற்கூறியவாறு எம்பெருமானாகிய சுந்தரேசர் தன் திருவாக்கினாலேயே அன்னை மீனாட்சி தேவியாருக்கு உரைத்ததாக ஸ்கந்த புராணம் உரைக்கிறது.
----------------------------------------------------------------------------
WhatsApp No.9894560575

Facebook Id:https://www.facebook.com/profile.php?id=100009012810626

Website:http://www.sreesivasiddhargalsevatrust.com/

Youtube Channel:https://www.youtube.com/channel/UCp79Rv5FfGF1hiztqDn0FZg


No comments:

Post a Comment